சத்தியமங்கலத்தில் கீழே கிடந்த ரூ.1,000-த்தை எடுத்துபோலீசில் ஒப்படைத்த மாணவர்கள்
சத்தியமங்கலத்தில் கீழே கிடந்த ரூ.1,000-த்தை எடுத்து போலீசில் மாணவர்கள் ஒப்படைத்தனா்;
சத்தியமங்கலம் நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கூட மாணவர்கள் தரணி, ரஞ்சித், மவுனேஷ், லலித். இதில் தரணி, ரஞ்சித், மவுனேஷ் 10-ம் வகுப்பும், லலித் 9-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். நண்பர்களான இவர்கள் 4 பேரும் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்கள். சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே சென்றபோது ரோட்டில் ரூ.1,000 கிடந்ததை பார்த்தனர். உடனே அந்த பணத்தை எடுத்து மாணவர்கள் அக்கம்பக்கத்து கடைக்காரர்களிடம் விசாரித்துள்ளனர். ஆனால் யாருடைய பணம் என்பது தெரியவில்லை. இதனால் மாணவர்கள் சத்தியமங்கலம் போலீஸ் நிலையம் சென்று அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.முருகேசனிடம் ஒப்படைத்தார்கள்.
இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் நேற்று காலை பள்ளிக்கூட இறை வணக்கத்தின்போது அங்கு சென்றனர். பின்னர் மாணவர்களின் நேர்மையை பாராட்டி போலீசார் பேசினார்கள். மேலும் அவர்களுக்கு அகராதிகள் பரிசுகளாக வழங்கப்பட்டன. இதையடுத்து 4 மாணவர்களையும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டினார்கள்.