இஸ்ரோ சார்பில் திருமங்கலம் அரசு பள்ளியில் செயற்கைக்கோள் ஆராய்ச்சி கூடம் ஆசிரியர்கள் தகவல்

திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் இஸ்ரோ சார்பில், செயற்கைக்கோள் ஆராய்ச்சி கூடம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Update: 2023-08-14 19:36 GMT

திருமங்கலம், 

திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் இஸ்ரோ சார்பில், செயற்கைக்கோள் ஆராய்ச்சி கூடம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

அரசு பள்ளி மாணவிகள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆசாதி சேட்டிலைட் செயற்கைக்கோள் தயாரித்து விண்ணில் ஏவுவதற்கு திட்டமிட்டது. அதற்காக இந்தியாவில் உள்ள 75 அரசு பள்ளிகளை தேர்வு செய்து ஒவ்வொரு பள்ளிகளிலும் இருந்து 10 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தமிழகத்தில் இருந்து மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 10 மாணவிகளும் அடங்குவர். இந்த பள்ளியில் படிக்கும் 10 மாணவிகள் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 10-ந் தேதி இஸ்ரோவில் தயாரிக்கப்பட்ட ஆசாதி சாட் - 1 என்ற செயற்கைக்கோளை அனுப்புவதற்கு மின்னணு உபகரணங்கள் தயாரித்து அனுப்பியவர்கள்.

தொடர்ந்து 2023-ம் ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி ஆசாதி சாட் - 2 செயற்கைகோள் விண்ணில் பாய்வதற்கு மின்னணு உபகரணங்களை தயாரித்து கொடுத்தனர். இப்பள்ளியை சேர்ந்த 10 மாணவிகளை, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கல்வித்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் பாராட்டினர்.

ஆராய்ச்சி கூடம்

இந்நிலையில் கடந்த இருதினங்களுக்கு முன்பு இப்பள்ளி மாணவிகளை டெல்லியில் உள்ள தனியார் நிறுவனம் வரவழைத்து பாராட்டின. அதில் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு ஆகிய மாநிலங்களில் இருந்து மாணவிகள், தெற்கில் இருந்து திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி குகப்பிரியா, பள்ளி தலைமை ஆசிரியை திலகவதி, அறிவியல் ஆசிரியை சிந்தியா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களுக்கான பாராட்டு விழா நேற்று திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

இஸ்ரோ நிறுவனம், திருமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், செயற்கைக்கோள் தயாரிப்பதற்கான தொழிற் (ஆராய்ச்சி) கூடம் அமைப்பதற்கு இடத்தை தேர்வு செய்துள்ளதாகவும், இந்த கூடத்தில் இப்பள்ளி மாணவிகள் மட்டுமல்லாது, பிற பள்ளி யில் பயிலும் சிறந்த மாணவ, மாணவிகளும் வந்து தங்களது திறனை மேம்படுத்தி கொண்டு, வளர்ச்சி அடையலாமென பள்ளியின் அறிவியல் ஆசிரியை சந்தியா தெரிவித்தார். தமிழகத்திலேயே இப்பள்ளிக்கு மட்டுமே இந்த ஆராய்ச்சி கூடம் அமைப்பதற்கு இஸ்ரோ நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது என ஆசிரியர்கள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்