சசிகலாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை -எடப்பாடி பழனிசாமி பேட்டி
சசிகலாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று தருமபுர ஆதீன மடாலயத்திற்கு வருகை தந்தார். அப்போது மடாலய வளாகத்தில் வளர்க்கப்பட்டு வரும் ஒட்டகத்திற்கு உணவாக இலைக் கொத்துகளை வழங்கினார்.
தொடர்ந்து தருமபுர ஆதீனம் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு தலையிடக்கூடாது
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரசு ஆய்வு நடத்துவது தொடர்பான முழு விவரங்கள் கிடைத்த பின்னரே அது குறித்து கருத்து தெரிவிக்க முடியும். எல்லா மதங்களையும் சமமாக பார்க்க வேண்டும். மத விவகாரங்களில், ஆண்டாண்டு காலமாக பின்பற்றும் வழிமுறைகளில் அரசு தலையிடக்கூடாது. ஆதீனங்களில் திட்டமிட்டு இந்த அரசு மூக்கை நுழைக்கப் பார்க்கிறது. இது கண்டிக்கத்தக்கது.
தொடர்ந்து ஆண்டாண்டு காலமாக பட்டினப்பிரவேசம் நடந்து கொண்டு இருக்கிறது. அதை வேண்டுமென்றே தி.மு.க. அரசு தடை செய்தது. பல்வேறு தரப்பினரும் அழுத்தம் கொடுத்த காரணத்தால் அரசு அனுமதி அளித்தது.
எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள்
அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் அ.தி.மு.க. அரசால் தொடங்கப்பட்ட திட்டம் என்பதற்காகவே அதை முடக்கினார்கள். அ.தி.மு.க. உள்ளிட்ட பொதுமக்கள் எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் அது தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சசிகலா
சசிகலா மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, சசிகலாவுக்கும், அ.தி.மு.க.வு.க்கும் எந்த தொடர்பும் இல்லை. தயவு செய்து இனிமேல் அதுகுறித்து எந்த கேள்வியும் எழுப்ப வேண்டாம் என்றார்.