புனித அடைக்கல அன்னை ஆலய திருவிழா

புனித அடைக்கல அடைக்கல அன்னை ஆலய திருவிழாவையொட்டி சப்பர பவனி நடைபெற்றது.

Update: 2023-05-30 18:45 GMT

காளையார்கோவில்

புனித அடைக்கல அடைக்கல அன்னை ஆலய திருவிழாவையொட்டி சப்பர பவனி நடைபெற்றது.

ஆலய திருவிழா

காளையார் கோவில் வட்டம் புலியடிதம்மம் புனித அடைக்கல அன்னை ஆலயத் திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் இரவு புனித அன்னை மரியாள் புனிதர்கள் வாழ்வில் செய்த அற்புதம் என்ற தலைப்பில் நவநாள் சிந்தனையும் திருப்பலியும் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை 5 மணி அளவில் அருள்தந்தை லெவே அடிகளாரின் உருவப்படம் முக்கிய வீதி வழியாக வலம் வந்தது. அருள்தந்தை லெவே அடிகளார் இந்தியாவில் மத போதகராக பணியாற்றினார். அவர் சருகணியில் தங்கி புலியடிதம்மம், பள்ளித்தம்மம், ஆண்டவூரணி, திருவேகம்புத்தூர் போன்ற பகுதியில் பணிபுரிந்து பக்தியையும், ஒற்றுமையையும் உதவி செய்யும் மனப்பான்மையையும் தனது துறவற வாழ்வு வழியாக மக்களிடம் கொண்டு வந்தார். அவரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவின்போது அவரது உருவப்படம் திருவிழா அன்று முக்கிய வீதி வழியாக வலம் வரும்.

சப்பர பவனி

திருவிழாவையொட்டி மாலை 6 மணி அளவில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியை பங்குத்தந்தை சூசை மற்றும் அருள் பணியாளர்கள் நிறைவேற்றினர். இத்திருப்பலியில் அருள் சகோதரர்கள், அருள் சகோதரிகள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் கலந்து கொண்டனர். திருப்பலி முடிந்ததும் புனித அடைக்கல அன்னை உருவம் தாங்கிய சப்பர பவனி நடைபெற்றது. இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இந்த ஆலயத்தை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அருட்தந்தை பிளஞ்சார்டு என்ற சேசு சபை பாதிரியார் 1937-ம் ஆண்டு கட்டினார். 2015-ம் ஆண்டு அருட்தந்தை சேவியர் வேதம் தலைமையில் புனித அடைக்கல அன்னை ஆலய அர்ச்சிப்புப் பணி நடைபெற்றது. விழாவையொட்டி இன்று (புதன் கிழமை) காலை 8 மணிக்கு திருவிழா திருப்பலியும், பின் கொடி இறக்கமும் நடைபெறும். திருவிழா நிகழ்வுகளை கிராம பொதுமக்களும் மற்றும் இளைஞர் மன்றத்தின் சார்பில் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்