மரக்கன்று நடும் நிகழ்ச்சி
வீரவநல்லூரில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
சேரன்மாதேவி:
வீரவநல்லூர் பூமிநாத சுவாமி கோவில் நந்தவனத்தில் சர்வதேச இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 'நம்ம ஊரு நந்தவனம்' திட்டத்தின் கீழ், பூ மரங்கள் நடும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் கார்த்திகேயன் மரக்கன்றுகளை நட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து கோவில் தேரை பார்வையிட்டார். அப்போது வீரவநல்லூர் பகுதி பொதுமக்கள் கோவில் தேரானது ரதவீதிகளில் உலா வர ஏதுவாக, ரதவீதி சாலைகளை விரிவாக்கம் செய்து தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
முன்னதாக கோபாலசமுத்திரம் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் பொருநை ஆற்றுச்சோலை திட்டத்தின் கீழ் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார். இதில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம், தாசில்தார் பார்கவி தங்கம் (பொறுப்பு), பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம், தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் சித்ரா, துணைத் தலைவர் வசந்தசந்திரா, கோபாலசமுத்திரம் பேரூராட்சி தலைவர் தமயந்தி, துணைத்தலைவர் சுந்தர்ராஜன், வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அயன்சிங்கம்பட்டி கிராமத்தில் உள்ள வடக்கு குளம் தூர்வாரும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அம்பாசமுத்திரம் தாசில்தார் சுமதி, அயன்சிங்கம்பட்டி பஞ்சாயத்து தலைவர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.