நெல்லையில் தூய்மை பணியாளர்கள் சாலைமறியல்
பணி நிரந்தரம் செய்யக்கோரி, நெல்லையில் சாலைமறியலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் 125 பேரை போலீசார் கைது செய்தனர்.
பணி நிரந்தரம் செய்யக்கோரி, நெல்லையில் சாலைமறியலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் 125 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலைமறியல்
நெல்லை வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் சி.ஐ.டி.யு. சார்பில் நேற்று சாலைமறியல் போராட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் மாரியப்பன், செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
தினக்கூலி தூய்மை பணியாளர்களுக்கு தினசரி சம்பளமாக ரூ.730 நிர்ணயம் செய்ய வேண்டும். பல வருடங்கள் சுய உதவிக்குழு மூலம் பணி செய்யும் தினக்கூலி தொழிலாளர் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம்பளத்துடன் கூடிய வாரவிடுமுறை அளிக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சட்டப்படியான சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
125 பேர் கைது
சங்க மாவட்ட தலைவர் பீர் முகம்மதுஷா, மாவட்ட இணை செயலாளர் சரவணபெருமாள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
சாலைமறியலில் ஈடுபட்ட 125 பேரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதையொட்டி மாநகர துணை போலீஸ் கமிஷனர் அனிதா, உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.