அமைச்சர் காரை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்

கூடலூரில் சம்பள உயர்வு கோரி 4-வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அமைச்சர் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-05 20:30 GMT

கூடலூர்

கூடலூரில் சம்பள உயர்வு கோரி 4-வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அமைச்சர் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர் வேலைநிறுத்தம்

கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள தினக்கூலி ரூ.648 வழங்கப்படாமல் உள்ளது. அதற்கு பதிலாக ரூ.300 மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் தங்களுக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், இந்த பிரச்சினையில் உரிய தீர்வு காணப்படாமல் உள்ளது. இதனால் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்தனர். அதன்படி நேற்று 4-வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வீடுகள் தோறும் குப்பைகள் சேகரிக்கும் பணி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அவதி

இதனால் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை வீடுகளில் வைத்திருக்கும் பொதுமக்கள், பொது இடங்களில் கொட்ட வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, 4 நாட்களாக குப்பைகள் சேகரிக்க தூய்மை பணியாளர்கள் வராததால் வீட்டில் வைத்திருக்க முடியாத நிலை உள்ளது. இதனால் குப்பைகளை பொது இடங்களில் கொட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு உள்ளது என்றனர்.

இதற்கிடையே கூடலூரில் தி.மு.க. பிரமுகர் துக்க நிகழ்ச்சிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று கூடலூர் வந்தார். இதை அறிந்த தூய்மை பணியாளர்கள் பழைய பஸ் நிலையத்தில், அமைச்சர் காரை முற்றுகை யிட்டு தங்களுக்கு குறைந்த சம்பளம் வழங்குவதாக முறையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தீர்வு காணப்படும்

இதைக்கண்ட அமைச்சர் காரில் இருந்து இறங்கி தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குறைந்த சம்பளம் வழங்குவது குறித்து ஒப்பந்ததாரரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்றார். பின்னர் அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் தூய்மை பணியாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்