ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட துப்புரவு பணியாளர்கள்

புதிய பணியாளர்களை தேர்வு செய்வதை கண்டித்து ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தை ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-25 18:28 GMT

நகராட்சி அலுவலகம் முற்றுகை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளை தூய்மை படுத்தவும், குப்பைகளை அகற்றவும் 134 ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் இவர்களை பணியிலிருந்து நீக்கிவிட்டு புதிதாக 73 துப்புரவு பணியாளர்களை பணி நியமனம் செய்ய ஜெயங்கொண்டம் நகராட்சி முடிவெடுத்து உள்ளது. மேலும் அதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலக நுழைவுவாயில் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணி நீக்கம்

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் கூறியதாவது:- ஜெயங்கொண்டம் நகராட்சியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு 76 மாதம் வரவேண்டிய நிலுவைத்தொகை, தொழிலாளர் வைப்பு நிதி என சுமார் ரூ.5 கோடி வர வேண்டி உள்ளது. இந்தநிலையில் எங்களை பணி நீக்கம் செய்து புதிய துப்புரவு பணியாளர்களை பணி நியமனம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையில் புதிய துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்ய தடை விதித்தும், ஏற்கனவே பணியில் உள்ள துப்புரவு பணியாளர்களை பணியாற்ற அனுமதித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர். இந்தநிலையில், தீர்ப்புக்கான கடிதம் எங்களுக்கு கிடைப்பதற்கு முன்பாக புதிய துப்புரவு பணியாளர்களுக்கு பணி நியமனம் செய்வதற்காக முன் தேதியிட்டு பணி நியமன ஆணை வழங்க நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

கொரோனா காலத்தில்...

கடந்த பல ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வருகிறோம். கொரோனா காலத்தில் எங்களது உயிரையும் மதிக்காமல் மக்கள் பணியாற்றினோம். ஆனால் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் துப்புரவு பணியாளருக்கு கல்வி தகுதி, வயது நிர்ணயம் என கூறி எங்களை பணி நீக்கம் செய்ய திட்டமிடுகிறார்கள். எங்களுக்கு வேறு வாழ்வாதாரமில்லை. இதை நம்பியே எங்களது குடும்பமும் உள்ளது.

எனவே புதிய துப்புரவு பணியாளர்களை பணி நியமனம் செய்வதை ரத்து செய்து பழைய துப்புரவு ஊழியர்களை பணியில் தொடர அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் பல்வேறு போராட்டங்கள் நடத்தவும் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கல்வி தகுதி

இதுகுறித்து நகராட்சி தலைவர் சுமதி சிவக்குமார் கூறியதாவது:- ஜெயங்கொண்டம் நகராட்சியில் 73 துப்புரவு பணியாளர்களும், டிரைவர்கள், சூப்பர்வைசர்கள் உள்ளிட்ட 15 பேர் என 88 நபர்களை மட்டுமே பணியில் அமர்த்த முடியும். வயது முதிர்வு அதாவது 50-க்கு வயதுக்கு மேற்பட்டவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. துப்புரவு பணியாளர்கள் குறைந்தபட்ச கல்வி தகுதி 7-வது தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மற்றவர்கள் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு பிடித்தம் போக ரூ.407 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவைதான் அரசாணையில் உள்ளது. அதுதான் நடைமுறைப்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் துப்புரவு பணியாளர்களிடம் நகர மன்ற தலைவர் சுமதி சிவக்குமார், நகராட்சி ஆணையர் மூர்த்தி ஆகியோர் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது துப்புரவு பணியாளர்களிடம் தாங்களே 88 பேரையும் தேர்வு செய்து கொடுங்கள் என்று கேட்டதாகவும், அதற்கு துப்புரவு பணியாளர்கள் 134 பேருக்கும் வேலை கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த சம்பவம் காரணாக நகராட்சி அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்