கோவில்களில் சம்வஸ்திரா அபிஷேகம்

சுவாமிமலை, அம்மாப்பேட்டை கோவில்களில் சம்வஸ்திரா அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-08-24 20:46 GMT
கும்பகோணத்தை அடுத்துள்ள சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும். தமிழ் வருட தேவதைகள் 60 பேரும், 60 படிக்கட்டுகளாக இருந்து இத்தலத்திற்கு வருகை தரும் முருக பக்தர்களுக்கு சேவை செய்வதாக ஐதீகம்.

இத்தலத்தில் தான் தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் மந்திரப் பொருளை முருகன் குருவாக இருந்து உபதேசம் செய்ததால் அவர் சுவாமிக்கே நாதன் ஆனார். இதனால் இங்கு முருகப்பெருமான் சுவாமிநாத சுவாமி என போற்றி வணங்கப் பெறுகிறார்.

சம்வஸ்திரா அபிஷேகம்

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் கடந்த 2015-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதனையொட்டி நேற்று 7-ம் ஆண்டு குடமுழுக்கு தினத்தில், சம்வஸ்திரா அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, புனிதநீர் நிரப்பிய கடங்களை ஸ்தாபித்து, பல்வேறு விதமான மூலிகை பொருட்களை கொண்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து பூர்ணாகுதிக்கு பிறகு தீபாராதனை காண்பிக்கப்பட்டு நாதஸ்வர மேளதாளம் முழங்க கடங்கள் புறப்பாடாகி மலைக்கோவிலை சென்றடைந்தது. அங்கு மூலவர் சுவாமிநாதசுவாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

அம்மாப்பேட்டை

இதேபோல அம்மாப்பேட்டை உத்திராபதியார் கோவில் தெருவில் உள்ள உத்திராபதியார் கோவில் குடமுழுக்கு நடந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி முதலாம் ஆண்டு சம்வஸ்திரா அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகம் கலந்து கொண்டு கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து அர்ச்சகர்கள், கோவில் வளாகத்தில் விசேஷ மூலமந்திர யாகம் நடத்தி உத்திராபதியாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி துரைராஜ் மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்