கோ-ஆப்டெக்சில் ரூ.2.20 கோடி விற்பனை இலக்கு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தர்மபுரி, அரூரில் உள்ள 2 கோ-ஆப்டெக்சில் ரூ.2.20 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

Update: 2022-09-27 18:45 GMT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தர்மபுரி, அரூரில் உள்ள 2 கோ-ஆப்டெக்சில் ரூ.2.20 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

தீபாவளி சிறப்பு விற்பனை

தர்மபுரி நாச்சியப்பா கவுண்டர் தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நெல்லிக்கனி விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் சாந்தி குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர் ஒரு புடவையை வாங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

அப்போது கலெக்டர் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து விடுமுறை நாட்களிலும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் செயல்படும். அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளர்களுக்கு உதவிட கேட்டு கொள்ளப்படுகிறது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தர்மபுரி, அரூர் ஆகிய இடங்களில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் ரூ.95.21 லட்சம் மதிப்பீட்டில் ஜவுளிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

விற்பனை இலக்கு

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தர்மபுரி கோ-ஆப்டெக்ஸ் நெல்லிக்கனி விற்பனை நிலையத்திற்கு ரூ.2 கோடியும், அரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு ரூ.20 லட்சமும் என மொத்தம் ரூ.2.20 கோடி விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்பு தள்ளுபடியாக அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் வசதியில் 30 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. பொதுமக்கள், அரசு அலுவலர்கள் அனைவரும் தீபாவளி ஜவுளிகளை வாங்கி பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் சேலம் மண்டல மேலாளர் காங்கேயவேலு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், தர்மபுரி தாசில்தார் ராஜராஜன், தர்மபுரி நெல்லிக்கனி விற்பனை நிலைய மேலாளர்கள் ரெஜினா, சுதாகர், ரேவதி, ரக மேலாளர்கள் பாலமுருகன், பாண்டுரங்க ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்