சேலம் சிறை வார்டன் பணி இடைநீக்கம்

கைதியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்ற சேலம் மத்திய சிறை வார்டனை பணி இடைநீக்கம் செய்து, சிறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-06-28 20:03 GMT

கைதியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்ற சேலம் மத்திய சிறை வார்டனை பணி இடைநீக்கம் செய்து, சிறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

ஆயுள் தண்டனை கைதி

சென்னை தண்டையார் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 44). ஆயுள் தண்டனை கைதியான இவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நன்னடத்தையின் காரணமாக இவர் 3 நாள் பரோல் வாங்கிக்கொண்டு கடந்த 22-ந்தேதி சொந்த ஊருக்கு சென்றார். பின்னர் 25-ந்தேதி மீண்டும் சிறைக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் ஹரிகிருஷ்ணன் சிறைக்கு திரும்பாமல் தலைமறைவாகினார்.

இதையடுத்து ஹரிகிருஷ்ணனை சிறை வார்டன்கள், போலீசார் தேடினர். இந்த நிலையில் சிறை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 25-ந் தேதி சேலம் மத்திய சிறைக்கு வந்த ஹரிகிருஷ்ணனை, சிறை வார்டன் ராமகிருஷ்ணன் என்பவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து ராமகிருஷ்ணனிடம் சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பணி இடைநீக்கம்

அப்போது பரோல் முடிந்து சிறைக்கு வந்த அவர், வாசல் முன்பு நின்று கொண்டு பழம் வாங்க வேண்டும் என்று தன்னிடம் கூறினார். இதனால் மோட்டார் சைக்கிளில் அஸ்தம்பட்டிக்கு அழைத்துச்சென்றேன். பின்னர் பழக்கடைக்கு சென்ற ஹரிகிருஷ்ணன் தலைமறைவாகி விட்டார் என்று அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து வார்டன் ராமகிருஷ்ணனை பணி இடைநீக்கம் செய்து சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் உத்தரவிட்டார். மேலும் தலைமறைவான கைதி ஹரிகிருஷ்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்