சேலம்-ஓமலூர் புதிய பாதையில் அதிவேக ரெயில் நாளை சோதனை ஓட்டம்-பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

சேலம்-ஓமலூர் புதிய பாதையில் நாளை அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடக்கிறது. இதனால் தண்டவாள பகுதிக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-01-28 23:39 GMT

சூரமங்கலம்:

இருவழிப்பாதை

சேலம் ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட சேலம்-மேட்டூர் இடையே இருவழிப்பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் ஓமலூர், மேச்சேரி, மேட்டூர் அணை மார்க்கத்தில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பணி முடிவடைந்து மின்வழித்தடமாக மாற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

மேலும் சேலம்-ஓமலூர் இடையே 12.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருவழிப்பாதை திட்டத்தில் தண்டவாளம் அமைக்கும் பணி கடந்த ஓராண்டுக்கு மேலாக நடந்தது. இந்த பணி முழுமையாக நிறைவடைந்து மின்வழித்தடமும் அமைத்து முடிக்கப்பட்டுள்ளது.

சோதனை ஓட்டம்

இந்த நிலையில் சேலம்-ஓமலூர் இருவழிப்பாதையில் தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் நாளை (திங்கட்கிழமை) அதிவேக ரெயிலை இயக்கி சோதனை நடத்துகிறார். இந்த சோதனை ஓட்டம் மதியம் 12 மணிக்கு தொடங்கி 2 மணி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, சேலம்-ஓமலூர் இருவழிப்பாதையில் நாளை அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடைபெறுவதால் பொதுமக்கள் தண்டவாள பகுதிக்கு வர வேண்டாம். மேலும் தண்டவாள பகுதியையொட்டி உள்ள கிராம மக்கள் தண்டவாள பகுதியை கடக்கவும் கூடாது என்றனர்.

மேலும் செய்திகள்