ரூ.693½ கோடியில் தனிக்குடிநீர் திட்டம் தேவையா?-தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே தள்ளுமுள்ளு-சேலம் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
ரூ.693½ கோடியில் தனிக்குடிநீர் திட்டம் தேவையா? என்பது குறித்து தி.மு.க-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே தள்ளுமுள்ளு நடந்ததால் சேலம் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மாமன்ற கூட்டம்
சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஆணையாளர் கிறிஸ்துராஜ், துணைமேயர் சாரதா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க. எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி பேசும்போது, சேலம் மாநகராட்சிக்கு என தனிக்குடிநீர் திட்டம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. 150 மில்லியன் லிட்டர் தண்ணீரை கொண்டு வரும் அளவுக்கு அத்திட்டம் இருக்கிறது. அதை சீரமைப்பு செய்தாலே தினமும் குடிநீர் வினியோகம் செய்யமுடியும். ஆனால் தற்போது நங்கவள்ளி-மேட்டூர் தொட்டில்பட்டி தனிக்குடிநீர் திட்டம் ரூ.693.49 கோடியில் செயல்படுத்த முடிவு செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். பொதுநிதியில் இருந்து அந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது. அந்த திட்டம் தேவையா? என்றார்.
இதையடுத்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் யாதவமூர்த்தி, ஆணை வரதராஜன், ஜனார்த்தன், மோகனப்பிரியா ஆகியோர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிப்பதாக கூறி மேயரின் இருக்கை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை வெளியே சென்று கோஷமிடுமாறு மேயர் ராமச்சந்திரன் அறிவுறுத்தினார். ஆனால் அவர்கள் கேட்காமல் கோஷங்களை எழுப்பினர்.
வாக்குவாதம்-தள்ளுமுள்ளு
அந்த சமயத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் தெய்வலிங்கம், சாந்தமூர்த்தி, ஈசன் இளங்கோ, சரவணன், முருகன், மண்டலக்குழு தலைவர் அசோகன் ஆகியோர் எழுந்து சென்று அ.தி.மு.க. கவுன்சிலர்களை வெளியே செல்லுமாறு கூறினர். இதனால் அ.தி.மு.க.-தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு நிலவியது. இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட அ.தி.மு.க. கவுன்சிலர்களை தி.மு.க. கவுன்சிலர்கள் வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
புதிய சாலைகள்
முடிவில் ஆணையாளர் கிறிஸ்துராஜ் பேசும்போது, சேலம் மாநகராட்சி முழுவதும் பாதாள சாக்கடை பணி நடந்து முடிந்த சாலைகள், 5 ஆண்டுகளுக்கு மேலான சாலைகள், மண்சாலையை தார்சாலையாக மாற்றுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக பொறியாளர்கள் அந்தந்த வார்டு கவுன்சிலர்களுடன் கலந்து ஆலோசித்து சாலைகளை தேர்வு செய்து திட்ட வரைவு தயாரிக்க வேண்டும். இந்த சாலைகள் அனைத்தும் மிக விரைவில் போடப்படும். சேலம் மாநகரில் 12 இடங்கள் மழையால் பாதிப்பு ஏற்படும் என கண்டறியப்பட்டு அந்த இடங்களில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரி வசூலில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என்றார்.
முடிவில், ஆளுங்கட்சி தலைவர் ஜெயக்குமார் அனைத்து தீர்மானங்களையும் வாசித்தார். அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.