பிளாஸ்டிக், புகையிலை பொருட்கள் விற்பனை: 98 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை

சேலம் மாவட்டத்தில் 98 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

Update: 2022-12-22 22:18 GMT

பிளாஸ்டிக் பொருட்கள்

சேலம் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி சில கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

அதன்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள் சேலம், ஓமலூர், மேட்டூர், சங்ககிரி உள்பட மாவட்டத்தில் 12 பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள 98 கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

கடைகளுக்கு நோட்டீஸ்

இதையடுத்து 19 கடைகளில் தடை செய்யப்பட்ட 67 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுதவிர, 3 கடைகளில் 3½ கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், இந்த சோதனையில் 3½ கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 26 கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்