10 வட்டாரங்களில் கிராமப்புற திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்

திருவாரூர் மாவட்டத்தில், 10 வட்டாரங்களில் கிராமப்புற திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்க வருவாய் அதிகாரி சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Update: 2022-07-05 17:14 GMT

கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டத்தில், 10 வட்டாரங்களில் கிராமப்புற திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்க வருவாய் அதிகாரி சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.

திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே அம்மையப்பன் ஊராட்சியில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் வளர்ப்பு பயிற்சி திட்டத்தின் கீழ் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் வளா்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதனை, மாவட்ட வருவாய் அதிகாரி சிதம்பரம் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் 10 வட்டாரங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக கொரடாச்சேரி வட்டாரம், அம்மையப்பன் ஊராட்சியில் தொடங்கப்பட்டது.

வேலை வாய்ப்பு

கிராமப்புற இளைஞர்களின் திறனை மேம்படுத்தி அவர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கி தருவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். மத்திய-மாநில அரசுகள் இணைந்து 120-க்கும் மேற்பட்ட தொழில் சார்ந்த திறன் பயிற்சி நிறுவனங்கள் மூலம் இப்பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. 18 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருப்பவர்கள் மற்றும் நலிவுற்றோர், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஆண், பெண் இருபாலரும் இத்திறன் பயிற்சியில் பங்கேற்கலாம். பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு 45 ஆகும்.

8-ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை படித்த அனைவரும் இத்திறன் பயிற்சிக்கு தகுதியானவர்கள். பயிற்சிக்கான பாடப்புத்தகங்கள், சீருடை, உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து இலவசமாக வழங்கப்படும். நர்சிங், ஓட்டல் நிர்வாகம், இயற்கை விவசாயம், கணினி பழுது பார்த்தல், ஏசி பழுதுபார்த்தல், தையல், அழகுக்கலை போன்ற பல திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிக்கான காலம் 3 முதல் 6 மாதம் ஆகும். பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சான்றிதழ்

அதனைத்தொடர்ந்து அம்மையப்பன் ஊராட்சியில் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், உதவி திட்ட அலுவலர்கள் தில்லைமணி, கீதாரெத்தினம், கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்திரன், ஊராட்சி மன்றத்தலைவர் முருகதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்