திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திருப்பூர் டி.எம்.எஸ். நகர் பகுதியை சேர்ந்த குருகணேஷ் என்பவர் மதுபாட்டிலுடன் வந்து மனு கொடுத்தார்.
அவர் அளித்த மனுவில், 'எனது நண்பர் திருப்பூர் நல்லூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். மதுபாட்டில் விலையை விட கூடுதலாக ரூ.10 வாங்கியுள்ளனர். நண்பர் வாங்கிய மதுபாட்டிலுக்குள் ரப்பர் துண்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து என்னிடம் கூறினார். நான் அந்த டாஸ்மாக் கடைக்கு சென்று ஊழியரிடம் கேட்டபோது உரிய பதில் சொல்லவில்லை. நேரம் செல்ல, செல்ல அவர்கள் எங்களை மிரட்டினார்கள். பாட்டிலுக்குள் ரப்பர் துண்டு வந்தது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்கள். சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.