மாடு மாலை தாண்டும் ஓட்டம்

சாணார்பட்டி அருகே மாடு மாலை தாண்டும் ஓட்டம் நடந்தது.

Update: 2023-05-24 19:00 GMT

சாணார்பட்டி அருகே உள்ள கவராயபட்டியில் முத்து தாத்தன், சின்னக்கம்மாள் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி மாடு மாலை தாண்டும் ஓட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

இதையொட்டி காளைகளுக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்பு காளைகள் கவராயபட்டி ஊர் மந்தைக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து ஓட விடப்பட்டது. பின்னர் அங்கிருந்து சுமார் 2 கி.மீ தூரம் காளைகள் போட்டி போட்டுக்கொண்டு ஓடின. அப்போது காளைகளுடன், இளைஞர்கள் பாரம்பரிய உடை அணிந்து தலையில் முண்டாசு கட்டி கையில் நீளமான குச்சிகளுடன் ஓடினர். இதில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த காளைக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த விழாவில் மணப்பாறை, விராலிமலை, வையம்பட்டி, புகையிலைபட்டி, ஜோத்தாம்பட்டி, கவராயபட்டி, தலையாரிபட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்