தர்மபுரி:
தேசிய மாணவர் படை (என்.சி.சி.) உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி உத்தரபிரதேசத்தை சேர்ந்த என்.சி.சி. அதிகாரி கர்னல் கே.எஸ்.பதவார் கன்னியாகுமரியிலிருந்து புதுடெல்லி வரை 3,000 கிலோ மீட்டர் ஒற்றுமை சுடர் ஓட்டத்தை மேற்கொண்டு வருகிறார். 60 நாட்கள் தொடர் ஓட்டமாக செல்லும் அவர் ஒற்றுமை சுடரை பிரதமர் மோடியிடம் வழங்க உள்ளார். கடந்த 20-ம் தேதி கன்னியாகுமரியில் ஓட்டத்தை தொடங்கிய அவர் பல்வேறு மாவட்டங்கள் வழியாக தர்மபுரிக்கு நேற்று முன்தினம் மாலை வந்தார்.
அவருக்கு பெரியாம்பட்டி சப்தகிரி பொறியியல் கல்லூரியில் என்.சி.சி. அதிகாரிகள், கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள் வரவேற்பு அளித்தனர். அவருடன் விமானப்படை அதிகாரி விங் கமாண்டர் எஸ்.யுவராஜ், ஜூனியர் வாரண்ட் அதிகாரி ஜெயப்பிரகாஷ், கல்லூரி என்.சி.சி. அதிகாரி சீனிவாசன் மற்றும் விமானப்படை வீரர்கள், என்.சி.சி. மாணவர்கள் உடன் வந்தனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை ஒற்றுமை சுடர் ஓட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, துணை போலீஸ் சூப்பிரண்டு சிந்து, சப்தகிரி, பத்மாவதி, பீ.ஜீ. கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் எம்.ஜி.எஸ்.வெங்கடேஸ்வரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் ராஜா, கல்லூரி இயக்குனர் பிரேம் ஆனந்த், தர்மபுரி அதியமான் பள்ளி என்.சி.சி. அலுவலர் முருகேசன், அதியமான்கோட்டை அரசு பள்ளி என்.சி.சி. அலுவலர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.