ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு
இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மண்மங்கலம் தாலுகாவிற்குட்பட்ட ராமேஸ்வரபட்டி, அண்ணாநகர், சிவியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தியும், பட்டா பெயர் மாற்றம் செய்து தரக்கூறி பலமுறை அரசு அலுவலகங்களில் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மண்மங்கலம் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, மண்மங்கலம் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கு வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாத காலத்திற்குள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதில், சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.