ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு வழங்கிய அனுமதியை திரும்ப பெறவேண்டும்: திருமாவளவன் ஐகோர்ட்டில் வழக்கு

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்ப பெறக்கோரி சென்னை ஐகோர்ட்டில் திருமாவளவன் மனு தாக்கல் செய்துள்ளார்.

Update: 2022-09-26 23:42 GMT

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ந் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் பலர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர், இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு நிபந்தனைகளுடன் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை திரும்ப பெறவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

அம்பேத்கர்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முந்தைய கால நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் அதன் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையை இந்த அமைப்பு பின்பற்றும். இந்த அமைப்பைச் சேர்ந்த கோட்சே, மகாத்மா காந்தியை கொலை செய்தார். அப்போது, ஆர்.எஸ்.எஸ். இனிப்பு வழங்கி கொண்டாடியது.

மகாத்மா காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க கூடாது. விஜய தசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு அம்பேத்கர் பெயரில் நடத்தப்படுகிறது. அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவாளராக சித்தரிக்க ஆர்.எஸ்.எஸ். இயக்கம் முயற்சிக்கிறது.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை

அக்டோபர் 2-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநிலம் முழுவதும் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடத்த உள்ளோம். அதேநேரம், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளது. தற்போது பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர்கள் விளம்பரத்துக்காக தங்கள் வீடுகளின் முன் குண்டுகளை வீசி வரும் சம்பவங்கள் நடைபெறும் சூழலில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் அது பொதுமக்கள் நடமாட்டத்துக்கு ஆபத்தாக முடியும்.

எனவே ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க போலீசுக்கு தடை விதிக்க வேண்டும். அனுமதி அளிக்கும்படி பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்