ரூ.88 கோடி போதை பொருள் பறிமுதல்; சென்னையை சேர்ந்த 2 பேர் கைது

இலங்கைக்கு கடத்த காரில் கொண்டு வந்த போது ரூ.88 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-12 18:45 GMT

இலங்கைக்கு கடத்த காரில் கொண்டு வந்த போது ரூ.88 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரை வழியாக இலங்கைக்கு போதை பொருள் கடத்த இருப்பதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் முதல் மதுரை வரை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பரமக்குடியை அடுத்த சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சென்னையை சேர்ந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

ரூ.88 கோடி போதை பொருள்

அப்போது காருக்குள் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த வருவாய் புலனாய்வு அதிகாரிகள் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் 88 கிலோ எடையுள்ள போதைப் பொருள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த போதைப்பொருளையும், காரையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், காரில் இருந்த 2 பேரையும் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் மெத்தபெட்டமைன் என்ற கிரிஸ்டல் கற்கள் வடிவிலான போதைப்பொருள் 38 கிலோவும், கஞ்சா ஆயில் 50 கிலோ என 88 கிலோ இருந்தது உறுதி செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட போதை பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.88 கோடி இருக்கலாம் என்றும், அதை இலங்கைக்கு கடத்த காரில் எடுத்து வந்து இருக்கலாம் என வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

2 பேர் கைது

இது தொடர்பாக காரில் வந்த சென்னை கொடுங்கையூரை சேர்ந்த பாக்கியராஜ்(வயது 39) மற்றும் தனசேகரன்(32) ஆகிய 2 பேரை கைது செய்த வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் அவர்களை புதுக்கோட்டையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்