திருச்சி தொழிலதிபரிடம் ரூ.66¾ லட்சம் மோசடி

திருச்சி தொழிலதிபரிடம் ரூ.66 லட்சத்து 89 ஆயிரம் மோசடி செய்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த தம்பதி மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-07-23 20:04 GMT


திருச்சி தொழிலதிபரிடம் ரூ.66 லட்சத்து 89 ஆயிரம் மோசடி செய்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த தம்பதி மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

தொழிலதிபர்

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ்.காலனி அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன். தொழிலதிபர். இவருடைய சகோதரியின் மகன் பாலாஜி மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர்-பவானி தம்பதியின் மகளை கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்தார்.

இந்த திருமணத்துக்கு பத்மநாபனும், அவருடைய உறவினர்களும் மத்தியபிரதேசத்துக்கு சென்று இருந்தனர். அப்போது, சந்திரசேகருடன் பத்மநாபனுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு ஒரு ஆண்டு கழித்து திருச்சிக்கு வந்த சந்திரசேகர் பத்மநாபன் வீட்டுக்கு வந்திருந்தார்.

ரூ.66 லட்சத்து 89 ஆயிரம் மோசடி

அப்போது, தான் ரியல் எஸ்டேட், நிதிநிறுவனம், கட்டுமானம் மற்றும் விவசாயம் போன்ற பல தொழில்களை செய்து வருவதாகவும், எனது தொழிலில் முதலீடு செய்தால் அதில் வரக்கூடிய லாபத்தில் பங்கு தருவதாகவும் சந்திரசேகரன் பத்மநாபனிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பி கடந்த 2016-ம் ஆண்டு மொத்தம் ரூ.66 லட்சத்து 89 ஆயிரத்தை சந்திரசேகரின் வங்கி கணக்குக்கு பல தவணைகளாக அனுப்பி உள்ளார். ஆனால் அவர் இதுவரை தொழிலில் கிடைத்த லாபத்தில் பத்மநாபனுக்கு எந்த பங்கும் கொடுக்கவில்லை.

இதுபற்றி அவர் கேட்ட போது சந்திரசேகர் சரிவர பதில் கூறவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பத்மநாபன், தன்னிடம் ரூ.66 லட்சத்து 89 ஆயிரத்தை மோசடி செய்த சந்திரசேகர் மற்றும் பவானி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், சந்திரசேகர், பவானி ஆகியோர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்