நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை சரிவு பண்ணையாளர்களுக்கு ரூ.65 கோடி இழப்பு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை சரிவால் பண்ணையாளர்களுக்கு ரூ.65 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.
4½ கோடி முட்டை உற்பத்தி
நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 6 கோடிக்கும் மேல் முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி 4½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. முட்டை கொள்முதல் விலையானது தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு (நெக்) நிர்ணயிக்கும் விலைக்கே, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும். கடந்த மாதம் 9-ந் தேதி 565 காசுகள் என்ற புதிய உச்சத்தை முட்டை விலை தொட்டது.
பின்னர் முட்டை கொள்முதல் விலை படிப்படியாக சரிவடைய தொடங்கியது. தற்போது 460 காசுகள் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு நிர்ணயம் செய்தாலும், வியாபாரிகள் 70 காசுகள் வரை குறைத்து வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
ரூ.65 கோடி இழப்பு
இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-
தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து, நாமக்கல் முட்டை விற்பனை விலை நிர்ணய ஆலோசனைக்குழு (நெஸ்பேக்), 40 காசுகள் குறைத்து விற்பனை செய்ய பரிந்துரை செய்கிறது. ஆனால், வியாபாரிகள் 70 காசுகள் குறைத்தே கொள்முதல் செய்கின்றனர்.
வழக்கமாக பண்ணைகளில் 2 நாட்கள் உற்பத்தியாகும் சுமார் 9 கோடி முட்டைகள் இருப்பு இருக்கும். இதை தேக்கம் என்று சொல்ல முடியாது. பண்ணையாளர்கள் ஒன்றாக சேர்ந்தால் மட்டுமே முட்டை விலையை கட்டுக்குள் கொண்டுவர முடியும். இல்லை என்றால் நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
அந்த வகையில் கடந்த மாதம் 15-ந் தேதி முதல் 24 நாட்களில் இதுவரை சுமார் ரூ.65 கோடி அளவிற்கு பண்ணையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு நிர்ணயம் செய்யும் விலைக்கு விற்பனை செய்தால் மட்டுமே பண்ணை தொழிலை காப்பாற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.