ரூ.1.80 லட்சம் மதிப்பிலான காப்பர் ஒயர் திருடிய 4 பேர் சிக்கினர்

ஓட்டப்பிடாரம் அருகே சோலார் நிறுவனங்களில் காப்பர் ஒயர் திருடிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-30 13:37 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே சோலார் நிறுவனங்களில் காப்பர் ஒயர் திருடிய 4 வாலிபர்களை போலீசார் கைது ெசய்தனர்.

விவசாயிக்கு கொலை மிரட்டல்

ஓட்டப்பிடாரம் அருகே குலசேகரநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி ஜெயராஜ் (வயது 57). இவர் தான் வளர்க்கும் கால்நடைகளுக்கு தீவனமாக வைக்கோல் வாங்கி வீட்டு அருகே வைத்திருந்தார். நேற்று முன்தினம் இந்த வைக்கோலை எடுத்து காப்பர் ஒயர் மீது போட்டு சிலர் தீ வைத்து எரித்துள்ளனர்.

இதனை பார்த்த ஜெயராஜ் அவர்களை கண்டித்துள்ளார். அப்போது அவர்கள் ஜெயராஜிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ஜெயராஜ் ஓட்டப்பிடாரம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

4 பேர் சிக்கினர்

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் குலசேகரநல்லூரைச் சேர்ந்த முருகன் மகன் மாயகிருஷ்ணன் (20), ஓட்டப்பிடாரம் இந்திராநகரை சேர்ந்த கருப்பசாமி மகன் சுரேஷ் என்ற சுமால் கருவாடு (19), ஓட்டநத்தம் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த 18 வயது சிறுவர்கள் 2 பேர் இருந்தனர்.

காப்பர் ஒயர் திருட்டு

இவர்கள் பசுவந்தனை, ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் சோலார் நிறுவனங்களில் இருந்து காப்பர் ஒயர்களை திருடியதும், அவர்கள் குலசேகரநல்லூரில் ஜெயராஜின் வைக்கோலை மூலம் தீவைத்து காப்பர் ஒயரை பிரித்து எடுத்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் திருடி விற்பனை செய்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான காப்பர் ஒயரையும் போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி வடபாகம், பசுவந்தனை போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்