ரேஷன் விற்பனையாளரிடம் ரூ.1000 லஞ்சம்; அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை
ரேஷன் விற்பனையாளரிடம் ரூ.1000 லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடாணையில் மொத்த விற்பனை பண்டகசாலை (ராம்கோ) மேலாளராக இருந்தவர் ஜெயச்சந்திரன். ரேஷன் கடை விற்பனையாளரிடம் மாதந்தோறும் ரூ.1000 லஞ்சம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2004-ம் ஆண்டு இவர் ரேஷன்கடை பணியாளரான சுந்தர்ராஜனிடம் ரூ.1000 லஞ்சம் வாங்கும்போது லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கவிதா லஞ்சம் வாங்கிய ஜெயச்சந்திரனுக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.