ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் மனைவியிடம் ரூ.9 லட்சம் மோசடி; இந்திய தொழிலாளர் கட்சி தலைவர் கைது

பெரம்பலூரில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் மனைவியிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்த இந்திய தொழிலாளர் கட்சி தலைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-14 18:45 GMT

புகார்

பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு பிரம்மா அபார்ட்மெண்ட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது மனைவி சித்ரா (வயது 50) பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 6-ந் தேதி ஒரு புகார் கொடுத்தார். அதில், பெரம்பலூர் மாவட்டம், கோனேரிபாளையத்தை சேர்ந்த பி.ஆர்.ஈஸ்வரன் (42) என்பவர் தனக்கு கூடுதல் பணம் தேவை இருப்பதாகக்கூறி கேட்டதால், நான் ரூ.8 லட்சம் அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பினேன்.

மேலும் 8 பவுன் தங்க நகைகளை அவரிடம் கொடுத்தேன். மேலும் ஈஸ்வரனின் மகனிடம் ரூ.1 லட்சம் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந் தேதி கொடுத்தேன். இவை அனைத்தும் ஈஸ்வரனின் மனைவிக்கு தெரியும். அவரிடம் நான் கொடுத்த பணத்தையும், நகையையும் திருப்பி கேட்டேன். ஆனால் பணம்-நகைகயை திருப்பி தராமல், தற்போது நான் ஒரு கட்சியின் தலைவர் என்றும், அரசியல்வாதியான அவரை நான் ஒன்றும் செய்ய முடியாது என்றும் பணம்-நகையை திருப்பி தர முடியாது என்றார்.

கைது

பணம்-நகையை திருப்பி கேட்க சென்றபோது என்னை ஈஸ்வரனும், அவரது மனைவி, மகன் தகாத வார்த்தைகளால் திட்டியும் தாக்கினர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களிடம் இருந்து எனது பணம்-நகையை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் ஈஸ்வரன், அவரது மனைவி, மகன் ஆகிய 3 பேர் மீது அடிதடி, கொலை மிரட்டல், மோசடி, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஈஸ்வரனை நேற்று கைது செய்த பெரம்பலூர் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். ஈஸ்வரன் இந்திய தொழிலாளர் கட்சியின் தலைவரும், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீது ஏற்கனவே பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக வழக்கு நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்