ரெயில்வேயில் வேலை, கேண்டீன் உரிமம் வாங்கி தருவதாக ரூ.73 லட்சம் மோசடி:தம்பதி உள்பட 3 பேருக்கு வலைவீச்சு

பெரியகுளம் அருகே ரெயில்வேயில் வேலை, கேண்டீன் உரிமம் வாங்கி தருவதாக ரூ.73 லட்சம் மோசடி செய்த தம்பதி உள்பட 3 போ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-09-08 18:45 GMT

பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டியை சேர்ந்த முத்து மகன் மாயன் (வயது 38). இவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

சின்னமனூர் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த அய்யனார் மகன் ஜமீன்பிரபு என்பவர் என்னிடம் நண்பராக பழகி வந்தார். அவரும், அவருடைய அண்ணன் ஈஸ்வரன் என்ற முனீஸ்வரன், ஈஸ்வரனின் மனைவி வனிதா. இவர்கள் சென்னை டி.நகரில் ரெயில்வே துறையில் அரசு வேலை வாங்கி கொடுப்பதற்கான பயிற்சி மையமும் நடத்தி வருவதாக கூறினர். பயிற்சி அளித்து ரெயில்வே வேலை வாங்கிக் கொடுப்பதாகவும், படித்து முடித்துவிட்டு நண்பர்கள் யாராவது இருந்தால் தொடர்பு கொள்ளுமாறும் கூறினர்.

அதை நம்பி எனது நண்பர்கள் 9 பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதற்கு அவர்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் ரூ.50 லட்சம் அனுப்பினேன். மேலும், அவர்கள் 3 பேரும் திருச்சி ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே கேண்டீன் நடத்த குறைந்த தொகைக்கு டெண்டர் மூலம் உரிமம் வாங்கித் தருவதாக கூறினர். அதை நம்பி அவர்களிடம் ரூ.23 லட்சத்தை கொடுத்தேன். ஆனால் அவர்கள் அரசு வேலை, கேண்டீன் உரிமம் வாங்கித் தராமல் ரூ.73 லட்சத்தை மோசடி செய்துவிட்டனர். எனவே 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, இந்த மோசடி தொடர்பாக ஜமீன்பிரபு, ஈஸ்வரன், வனிதா ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்