சர்க்கரை கொள்முதலில் மோசடி: ஓமலூர் வியாபாரி பறிகொடுத்த ரூ.5 லட்சம் மீட்பு-சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை
சர்க்கரை கொள்முதலில் ஓமலூர் வியாபாரி பறிகொடுத்த ரூ.5 லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.
ஓமலூர் அருகே காமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 21), சர்க்கரை வியாபாரி. இவர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த கவுரவ் என்பவரிடம் 30 டன் சர்க்கரை வாங்குவதற்காக அவரது வங்கி கணக்கிற்கு ரூ.9 லட்சத்து 38 ஆயிரத்து 175-யை ஆன்லைன் மூலம் அனுப்பினார். ஆனால் அவர் சர்க்கரையை அனுப்பாமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றினார்.
இதுதொடர்பாக மோகன்குமார் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கைலாசம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இதில் துரிதமாக செயல்பட்டு கவுரவின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு ரூ.5 லட்சம் மீட்கப்பட்டது. இந்த பணம் மோகன்குமாரின் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது.