ரெயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம்: ஆஜராக அவகாசம் கேட்டு நயினார் நாகேந்திரன் மனு

ரெயிலில் சிக்கிய பணத்துக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்து இருந்தார்.

Update: 2024-04-22 06:53 GMT

சென்னை,

சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 6-ந்தேதி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை கொண்டுசென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக பணத்தை எடுத்து சென்றதாக வாக்குமூலம் அளித்தனர்.

இது தொடர்பாக 22-ந்தேதி (இன்று) நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இந்த நிலையில், விசாரணைக்காக நயினார் நாகேந்திரன் தாம்பரம் காவல் நிலையத்தில் இன்று ஆஜராகவில்லை. மாறாக, நயினார் நாகேந்திரனின் வழக்கறிஞர் காவல் நிலையத்தில் ஆஜராகி மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், நயினார் நாகேந்திரன் ஆஜராக 10 நாட்கள் அவகாசம் வழங்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ரெயிலில் சிக்கிய பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் முன்னதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

மேலும் செய்திகள்