ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: விசாரணைக்கு தடை கோரி பா.ஜ.க. அமைப்புச் செயலாளர் மனு

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநில அமைப்புச் செயலாளர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Update: 2024-05-22 02:55 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலின்போது பறக்கும்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த வகையில் கடந்த மாதம் 6-ம் தேதி சென்னையில் இருந்து நெல்லைக்கு ரெயிலில் பணம் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரம் சென்றபோது அதில் தேர்தல் பறக்கும்படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், தமிழ்நாடு பா.ஜ.க. துணைத்தலைவரும், நெல்லை தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஓட்டலில் பணியாற்றிய ஊழியர்கள் என்பது தெரியவந்தது. தேர்தல் செலவுகளுக்காக நயினார் நாகேந்திரன் உத்தரவின் பேரிலேயே பணத்தை நெல்லைக்கு கொண்டு சென்றதாக கைது செய்யப்பட்டவர்கள் போலீசில் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி ஏற்கனவே சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக நேற்று சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி பா.ஜ.க. மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பா.ஜ.க. மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் தரும்படி கேசவ விநாயகம், எஸ்.ஆர்.சேகர் வேண்டுகோள் விடுத்ததாக தகவல் வெளியானது.

இதற்கிடையே, எஸ்.ஆர்.சேகர் ஆஜராகாததால் அவரிடம் நேரில் விசாரணை நடத்துவதற்காக சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.எஸ்.பி.சசிதரன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று காலை கணபதி சக்தி நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் எஸ்.ஆர்.சேகரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ரெயிலில் சிக்கிய பணம் எங்கே இருந்து வந்தது. கட்சிக்கும், அந்த பணத்துக்கும் சம்பந்தம் உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு எஸ்.ஆர்.சேகர் மிகவும் பொறுமையாக பதில் அளித்து உள்ளார். இந்த விசாரணை சுமார் 2 மணி நேரம் நடந்தது.

இந்த நிலையில், ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கும், எங்களது பெயருக்கும் களங்கும் விளைவிக்கும் வகையில், இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. எந்தக் காரணமும் இல்லாமல் அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் உள்நோக்கத்தோடு நடத்தப்படும் இந்த வழக்கின் புலன் விசாரணை சட்ட விரோதமானது என்பதால், இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்