விபத்தில் இறந்த திருச்சி போலீஸ் ஏட்டு குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

விபத்தில் இறந்த திருச்சி போலீஸ் ஏட்டு குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2023-08-27 20:44 GMT

திருச்சி,

திருச்சி அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தவர் ஸ்ரீதர் (வயது 45). இவர் கடந்த 30-ந் தேதி அரிஸ்டோ ரெயில்வே மேம்பாலத்தில் இரவு பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் மோதி அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது பற்றி அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், போலீஸ் ஏட்டு ஸ்ரீதரை இழந்து வாடும் குடும்பத்துக்கு ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்ததோடு, அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்தநிலையில் டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் முடிந்து சென்னை திரும்புவதற்காக நேற்று மதியம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு வி.ஐ.பி. அறையில் போலீஸ் ஏட்டு ஸ்ரீதரின் மனைவி மற்றும் குழந்தைகளிடம் ரூ.25 லட்சத்துக்கான காசோலையை முதல்-அமைச்சர் வழங்கினார். அப்போது மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், போலீஸ் கமிஷனர் காமினி ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் பகல் 1 மணிக்கு முதல்-அமைச்சர் சென்னை புறப்பட்டு வந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்