கோடைவிழாவையொட்டி, 5 நாட்களில் ஏற்காடு அண்ணா பூங்காவில் ரூ.20½ லட்சம் கட்டண வசூல்

ஏற்காட்டில் கோடைவிழாவையொட்டி அண்ணா பூங்காவில் 5 நாட்களில் ரூ.20½ லட்சம் கட்டணம் வசூலாகி உள்ளது.

Update: 2022-05-30 20:44 GMT

ஏற்காடு,

கோடை விழா

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 25-ந் தேதி கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இங்குள்ள அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சியை பார்வையிடவும், அருகில் உள்ள படகு குழாமில் படகு சவாரி செய்யவும் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நேற்று காலை 11 மணியளவில் ஏற்காட்டில் லேசான சாரல் மழை பெய்தது. அதன்பிறகு பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் மாலையில் இதமான குளுகுளு சூழல் நிலவியது சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.

கோடை விழாவையொட்டி நேற்று நடந்த கயிறு இழுத்தல் போட்டியில் நாகலூரை சேர்ந்த மணி பாலா தலைமையிலான பெண்கள் அணி முதலிடம் பிடித்தது. இதேபோல் சாக்கு ஓட்டப்பந்தயத்தில் ஏற்காட்டை சேர்ந்த காயத்திரி, தீபா, சித்ரா ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். இந்த போட்டிகளில் பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடினர்.

ரூ.20½ லட்சம் வசூல்

கடந்த 25-ந் தேதி கோடை விழா தொடங்கிய நாள் முதல் நேற்று முன்தினம் (29-ந் தேதி) வரை ஏற்காட்டில் கோடைவிழாவை கண்டுகளிக்க 72 ஆயிரத்து 387 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இதன்மூலம் கடந்த 25-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 5 நாட்களில் அண்ணா பூங்காவில் மட்டும் அனுமதி கட்டணம் மூலம் ரூ.20 லட்சத்து 50 ஆயிரத்து 600 வசூலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்