போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.24 லட்சம் நிதி உதவி

பணியின் போது இறந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.24 லட்சம் நிதி உதவி காக்கி உதவும் கரங்கள் சார்பில் வழங்கப்பட்டது.

Update: 2023-02-13 18:45 GMT


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் சங்கர்(வயது35). இவர் திருவெண்காடு போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தார். கடந்த நவம்பர் மாதம் சங்கர் விபத்தில் உயிரிழந்தார். அவர் போலீஸ்துறையில் 2011-ம் ஆண்டு பேட்சில் பணியில் சேர்ந்து பயிற்சி பெற்றார். இறந்த சங்கர் குடும்பத்துக்கு உதவிசெய்யும் வகையில் தமிழ்நாடு போலீஸ் 2011 பேட்ச் சார்பில் உருவாக்கப்பட்ட காக்கி உதவும் கரங்கள் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள போலீசார் தாங்களாக முன்வந்து அளித்த தொகை ரூ.24 லட்சத்து 31 ஆயிரத்து 100-யை இறந்த சங்கர் மனைவி பாலசரஸ்வதி, சகோதரர் சங்கர்கணேஷ் ஆகியோருக்கு வழங்க திட்டமிட்டனர். இந்த தொகை வங்கியில் டெபாசிட் செய்து அதற்கான சான்று மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாவிடம் வழங்கப்பட்டது. நேற்று மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, சங்கரின் மனைவி பாலசரஸ்வதி, சகோதரர் சங்கர்கணேஷ் ஆகியோரிடம் முழுத் தொகையை வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் முறையாக இறந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு காக்கி உதவும் கரங்கள் சார்பில் நிதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்