ஆன்லைன் மூலம் ரூ.22 லட்சம் மோசடி; வடமாநில வாலிபர் கைது

ஆன்லைன் மூலம் ரூ.22 லட்சம் மோசடி செய்ததாக வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-07 19:00 GMT

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவர் பெட்ரோல் பங்க் அமைப்பது தொடர்பாக சமூக வலைதளத்தில் வந்த தகவல்களை மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தார். அதில் இருந்த முகவரியை தொடர்பு கொண்ட போது ரூ.50 லட்சம் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை நம்பிய அந்த நபர் முதற்கட்டமாக ரூ.22 லட்சம் கொடுத்துள்ளார்.

ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் பெட்ரோல் பங்க் அமைப்பது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நபர் விண்ணப்பித்த முகவரியான குஜராத்திற்கு நேரடியாக சென்று பார்த்துள்ளார்.

ஆனால் அந்த முகவரியில் அவ்வாறான எந்த நிறுவனமும் செயல்படாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்த போலீசார் அவரது வங்கி கணக்கு, அதில் கொடுத்துள்ள மெயில் ஐ.டி., தொலைபேசி எண் ஆகியவற்றின் அடிப்படையில் அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்தனர்.

இதையடுத்து ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டவர் சந்திரஜித் ஸ்ரீவாஸ்தா (வயது 27) என்பதும், பீகாரை சேர்ந்த இவர் தற்போது அரியானா பகுதியில் இருப்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் சூப்பிரண்டு தனராஜ் கணேஷ் அறிவுறுத்தலின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் தலைமையிலான போலீசார் அரியானா பகுதிக்கு நேரடியாக சென்று சந்திரஜித்தை கைது செய்து தென்காசிக்கு அழைத்து வந்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்