போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாட்டின் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் - சென்னை மாநகராட்சி அதிரடி
போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாட்டின் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை,
போக்குவரத்து நெரிசலின் புகலிடமாக விளங்கும் சென்னையில் விபத்துக்களும் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. ஒருபுறம் வாழ்வாதாரம் தேடி சென்னைக்கு இடம் பெயரும் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் வாகன பெருக்கங்களால் விபத்துகள் நடைபெற்றாலும், மறுபுறம் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தான் செய்கிறது.
பாரம்பரியமாக இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் மட்டுமே தற்போது சென்னை மாநகர பகுதிகளில் மாடுகளை வளர்த்து வருகிறார்கள். இது வரவேற்கக் கூடிய ஒன்று தான் என்றாலும், அவற்றை மேய விடுவதற்கு இடமில்லாமல் தெருக்களில் விடுவது தான் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துகிறது.
பெரும்பாலான உரிமையாளர்கள் பால் கறந்த பின்பு புண்ணாக்கு உள்ளிட்டவைகள் வைத்துவிட்டு தங்கள் இடங்களில் கட்டி வைக்காமல் தெருக்களில் அவிழ்த்து விடுகின்றனர். இதனால் அந்த மாடுகள் மனம் போன போக்கில் செல்கிறது.
உணவு தேவைப்படும் போது, சாலைகளில் உள்ள குப்பைகளையும், பிளாஸ்டிக் பொருட்களையும், போஸ்டர்களையும், ஓட்டல்களில் வீசி எறியப்படும் உணவுகளையும் சாப்பிட்டு விட்டு சாலைகளின் நடுவே படுத்து தூங்குகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
இதனால் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமயைாளர்களுக்கு மாநரகாட்சி ஊழியர்கள் அபராதம் விதித்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை மாநகர பகுதிகளில் நடப்பாண்டில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த 5,447 மாடுகளை பிடித்து மாநரகாட்சி ஊழியர்கள் அபராதம் விதித்துள்ளனர். சாலையில் இடையூறாக சுற்றித்திரியும் மாட்டின் உரிமையாளருக்கு ரூ.1,500 அபராதம் விதித்துவந்த நிலையில், கடந்த 1-ம் தேதி முதல் அபராத தொகையை ரூ. 2 ஆயிரமாக சென்னை மாநகராட்சி உயர்த்தி உள்ளது.