மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு
தியாகதுருகத்தில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.2 லட்சம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கண்டாச்சிமங்கலம்,
உளுந்தூர்பேட்டை அருகே பின்னல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் மகன் ரமேஷ் (வயது 38) கொத்தனார். இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் குமார் என்பவரிடம் ரூ.2 லட்சம் கடன் கேட்டுள்ளார். இதையடுத்து குமார் தியாகதுருகத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உள்ள அவரது கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் எடுத்து ரமேசிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட ரமேஷ் தனது மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்டியில் வைத்துக்கொண்டு தியாகதுருகம் கடைவீதி பஸ் நிறுத்தத்திற்கு சென்றார். பின்னர் அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் இருந்த கடைக்கு டீ குடிக்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, மர்மநபர்கள் 2 பேர் ரமேசின் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிக்கொண்டிருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ் திருடன், திருடன் என கூச்சலிட்டார். அப்போது மர்மநபர்கள் பணத்தை திருடிக்கொண்டு மின்னல் வேகத்தில் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் குற்றப்பிரிவு சிறப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் தலைமையிலான போலீசார் கடைவீதியில் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.