திருவெண்ணெய்நல்லூர் வங்கி அருகேஎலக்ட்ரீசியன் ஸ்கூட்டர் பெட்டியை உடைத்து ரூ.2¼ லட்சம் கொள்ளைமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திருவெண்ணெய்நல்லூர் வங்கி அருகே நிறுத்தப்பட்டிருந்த எலக்ட்ரீசியன் ஸ்கூட்டர் பெட்டியை உடைத்து ரூ.2¼ லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-03-16 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர், 

நகைகளை அடகு வைத்து...

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் மகாத்மா காந்தி தெருவை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (வயது 62). எலக்ட்ரீசியனான இவர் நேற்று காலை ஸ்கூட்டரில் அதேஊரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று, தான் வாங்கிய கடனை அடைப்பதற்காக 8 பவுன் நகைகளை அடகு வைத்து ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்தை பெற்றார். அதன்பிறகு அந்த பணத்தை ஸ்கூட்டர் பெட்டிக்குள் வைத்துவிட்டு, வங்கி அதிகாரியிடம் அடகு தொடர்பாக சந்தேகங்களை கேட்க மீண்டும் வங்கிக்குள் சென்றார்.

கொள்ளை

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஸ்கூட்டர் பெட்டியின் பூட்டை உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இதனை அறியாத அப்துல் ரஹீம் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று, பணத்தை எடுக்க பெட்டியை திறக்க முயன்றார். அப்போது பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பெட்டியில் இருந்த பணத்தை காணவில்லை.

இதனால் பதறிய அவர் இதுபற்றி திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வங்கி அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது மாஸ்க் அணிந்து இருசக்கர வாகனத்துடன் நின்ற 20 வயது மதிக்கத்தக்க மர்மநபர்கள் 3 பேர், வங்கி எதிரே நிறுத்தப்பட்டிருந்த அப்துல் ரஹீம் ஸ்கூட்டர் பெட்டி லாக்கை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

பட்டப்பகலில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பட்டப்பகலில் வங்கி எதிரே ஸ்கூட்டர் பெட்டியை உடைத்து பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்