மாணவிகளின் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம்
காவிரி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணத்தை அமைச்சர் ரகுபதி வழங்கினார்
புதுக்கோட்டை மாவட்டம், பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் 4 பேர் நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனையடுத்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். இதனையடுத்து முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளை மாணவிகளின் குடும்பத்தினரிடம் அமைச்சர் ரகுபதி வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வருவாய் கோட்டாட்சியர்கள் குழந்தைசாமி (இலுப்பூர்), முருகேசன் (புதுக்கோட்டை) மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதேபோல் உயிரிழந்த மாணவிகளின் வீடுகளுக்கு சென்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. உயிரிழந்த மாணவிகளின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தனது சொந்த நிதியில் இருந்து உயிரிழந்த, மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கி ஆறுதல் கூறினார்.