தமிழகத்தில் மீன்பிடி துறைமுக மேம்பாட்டுக்கு ரூ.1,800 கோடி நிதி ஒதுக்கீடுமத்திய மீன்வளத்துறை மந்திரி பேச்சு

கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்தில் மீன்பிடி துறைமுக மேம்பாட்டுக்கு ரூ.1,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய மீன்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-31 18:45 GMT

புதுக்கடை, 

கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்தில் மீன்பிடி துறைமுக மேம்பாட்டுக்கு ரூ.1,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய மீன்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.

கடலோர கிராமங்களில் மந்திரிகள்

இந்தியா முழுவதும் கடலோர கிராமங்களை ஆய்வு செய்து மீனவர் குறைகளை தீர்க்க சாகர் பரிக்ரமா என்ற பயணத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. மீனவர்களின் பிரச்சினைகள், அனுபவங்கள், விருப்பங்கள் ஆகியவற்றை நன்கு புரிந்து கொள்ளவும், கடல் உணவு ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை ஆய்வு செய்யவும், கடலோர பகுதிகளின் மீனவர்களுக்கான நலத்திட்டங்களை பிரபலப்படுத்தவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் இருந்து தொடங்கிய இந்த பயணம் நேற்று குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் வந்தடைந்தது. இந்தக் குழுவில் மத்திய மீன்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா, இணை மந்திரி முருகன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

மீனவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

பின்னர் தேங்காப்பட்டணம் பகுதியில் உள்ள மீனவர்களிடம் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில் மீனவ பிரதிநிதிகள் பங்கேற்று துறைமுகப் பகுதியில் தொடர்ந்து நடக்கும் உயிரிழப்புகள், மாயமான மீனவர்களைத் தேட ஹெலிகாப்டர் தளம், விபத்துக்குள்ளாகும் மீனவர்களை மீட்க கடல் ஆம்புலன்ஸ், துறைமுக மேம்பாட்டு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதில் அளித்து மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா பேசுகையில் கூறியதாவது:-

ரூ.1,800 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் முதன் முறையாக தேங்காப்பட்டணத்தில் மீனவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் தனது தேர்தல் வாக்குறுதி படி மீன்வளத்துறை அமைச்சகத்தை ஏற்படுத்தினார். 38 ஆயிரம் கோடி ரூபாயில் மீனவர் மேம்பாட்டு நலனுக்காக ஒதுக்கி உள்ளார். இந்தியா மீன் ஏற்றுமதியில் 4-வது இடத்தில் உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் 1,800 கோடி ரூபாய் தமிழக மீன்பிடி துறைமுக மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

துறைமுகம் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து ஆராய துறைமுக கமிட்டி ஒன்று அமைத்து துறைமுகம் சீரமைக்கப்படும். மீனவர்கள் அளித்த அனைத்து மனுக்களுக்கும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக தேங்காப்பட்டணம் துறைமுகத்தை படகில் சென்று பார்வையிட்டு மந்திரிகள் ஆய்வு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் சப்- கலெக்டர் கவுசிக், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் மீனவ பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

தூத்தூர்-வள்ளவிளை

பின்னர் தூத்தூரில் உள்ள சமூக நலக்கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் பங்கேற்று மீனவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

அப்போது ஒரு வருடத்திற்கு முன்பு தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த மரிய ஜெசின்தாஸ் என்ற மீனவர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இந்தோனேசியா கடற்படையினரால் கைது செய்து சிறையில் வைத்து அடித்து கொன்றதாக அவரது தாயார் குற்றம்சாட்டினார். மேலும் அவரது சாவுக்கு நியாயம் வேண்டும் எனக்கூறி மனு அளித்தார்.

மேலும் மீனவர் பிரதிநிதி ஜஸ்டின் ஆண்டனி பேசுகையில், கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக கடலில் ஏற்பட்ட புயலில் சிக்கி மாயமான மீனவர்களின் குடும்பத்தினருக்கு கிடைக்க வேண்டிய அரசின் சலுகைகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. அவர்கள் இறந்ததாக கூறி இறப்பு சான்றிதழ் வழங்காமல் இருந்து வருவதால் இந்த நிலை. மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டால் அவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகோலும் என்றார்.

அதேபோல் மேம்படுத்த வேண்டிய திட்டங்களான இரவிபுத்தன்துறை வள்ளவிளை சாலை பணி, தூண்டில் வளைவுகள், கலங்கரை விளக்கம், ஏ.வி.எம். கால்வாயை தூர்வாருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பங்கு தந்தைகள் அளித்தனர்.

இதே போல் வள்ளவிளை, வாணியக்குடி, குறும்பனை, தனியார் மீன்பிடி துறைமுகம், குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்