ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் துணை மின் நிலையங்களில் ரூ.15 லட்சம் மின் கம்பிகள் திருட்டு - தி.மு.க. நிர்வாகி உள்பட 6 பேர் கைது

ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் துணை மின் நிலையங்களில் ரூ.15 லட்சம் மின் கம்பிகள் திருட்டு போனது. திருட்டில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வாகி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-04-29 14:15 IST

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே கீழானூர் துணை மின் நிலையத்திலும், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் உள்ளிட்ட பல்வேறு துணை மின் நிலையங்களில் மின் கம்பிகள் திருடு போனது.

இதுகுறித்து புகாரின் பேரில் வெங்கல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் திருவள்ளூர் அருகே உள்ள ஒதிக்காடு பகுதியைச் சேர்ந்த திருவள்ளூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் அலெக்ஸ் என்ற அலெக்சாண்டர் (வயது 35) என்பவருக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர்.

அவரை போலீசார் வெங்கல் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அலெக்ஸ், தனது நண்பர்களான ஒதிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சூர்யா (25), எழிலரசன் என்ற சுனில் (21), பிரவீன் குமார் (33), சித்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் பரத்குமார் (20), முகேஷ்குமார் (24) என மொத்தம் 6 பேர் சேர்ந்து தாமிர மின் கம்பிகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். ேமலும் அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான 3 டன் அலுமினிய மின் கம்பிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேடு முன்னிலையில் ஆஜர்படுத்தி அவரது உத்தரவின் பேரில் அனைவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்