ரூ.70 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.1.40 கோடி மோசடி - பா.ஜ.க. மாநில நிர்வாகி உள்பட 4 பேர் கைது
ரூ.70 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி, இமாசல பிரதேச தொழில் அதிபரிடம் ரூ.1.40 கோடி மோசடி செய்த பா.ஜ.க. மாநில நிர்வாகி உள்பட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.;
இமாசல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரீந்தர்பால் சிங். தொழில் அதிபரான இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
என்னுடைய தொழில் நிறுவன வளர்ச்சிக்காக ரூ.70 கோடி கடன் பெற்று தருவதாகவும், அதற்கு பதிவு கட்டணம் மற்றும் முத்திரை தாள் கட்டணம் என ரூ.1.40 கோடி வாங்கி, ஒரு கும்பல் மோசடி செய்துவிட்டது. ரூ.70 கோடிக்கான போலி வரைவோலையை காட்டி அவர்கள் என்னை மோசம் செய்துவிட்டனர். அந்த மோசடி கும்பல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, என்னிடம் பறித்த ரூ.1.40 கோடி பணத்தை மீட்டுத் தரும்படி வேண்டுகிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது-.
இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச்சேர்ந்த ராஜசேகர் (வயது 65), சென்னை போரூர், ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த ரஜிதா (36), கே.கே.நகரைச் சேர்ந்த ராமு (36), வளசரவாக்கத்தைச் சேர்ந்த தசரதன் (30) ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 1 லட்சம் ரொக்கப்பணம், 2 கார் மற்றும் போலியான ஆவணங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டவர் ராஜசேகர். இவர் பல்வேறு கட்சிகளில் இருந்துள்ளார். எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட்டதாக கூறப்படுகிறது. தற்போது பா.ஜ.க. மாநில விவசாய அணி நிர்வாகியாக இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.