விவசாயி வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் சிக்கியவாலிபரிடம் இருந்து ரூ.13 லட்சம் நகை, பணம் மீட்பு
விவசாயி வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் சிக்கிய வாலிபரிடம் இருந்து ரூ.13 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை போலீசார் மீட்டனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை அருகே உள்ள சு.கள்ளிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அப்புசாமிபெருமாள் மகன் மாணிக்கவாசகம் (வயது 45). விவசாயி. கடந்த 4-ந்தேதி மதியம் இவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் தினகரன் (35) என்பவர் உள்ளே புகுந்து, 30 பவுன் நகை, ரூ. 4 லட்சத்து 5 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தினகரனை தேடி வந்தனர். இந்த நிலையில், அவரை மற்றொரு திருட்டு வழக்கில் தர்மபுரி மாவட்டம் அரூர் போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காவலில் எடுத்து விசாரணை
இதையடுத்து, தினகரனை காவலில் எடுத்து தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். அதில் திருக்கோவிலூர் பகுதியில் நடந்த வேறு எந்த திருட்டு வழக்கிலாவது தினகரனுக்கு தொடர்பு உள்ளதா? என்கிற பல்வேறு கோணங்களில் போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிவில் அவரிடம் இருந்து 26½ பவுன் நகை, 232 கிராம் வெள்ளி, 2 லட்சம் ரூபாய் ரொக்கம் என்று மொத்தம் 13 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை தனிப்படை போலீசார் மீட்டனர். இதையடுத்து கொள்ளை வழக்கில் தினகரனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசாரை திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் பராட்டினார். அப்போது அவருடன் இன்ஸ்பெக்டர் பாலாஜி உள்பட பலர் உடனிருந்தனர்.