செங்கல்பட்டு மாவட்டத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க இந்த ஆண்டு ரூ.12½ கோடி இலக்கு - வேளாண் அதிகாரி

செங்கல்பட்டு மாவட்டத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க இந்த ஆண்டு ரூ.12 கோடியே 40 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று வேளாண் அதிகாரி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-26 10:23 GMT

செங்கல்பட்டு,

குறைந்த அளவு தண்ணீரில்

செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 66 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் நெல், உளுந்து, மணிலா உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இவ்வாறு பயிர் செய்யும் விவசாயிகள் ஏரி, கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு போன்றவற்றின் மூலம் தண்ணீர் பாசனம் செய்து வருகின்றனர்.

இவ்வாறு நிலத்தடி நீர் ஆதாரங்களை அதிக அளவில் விவசாய உபயோகத்திற்கு பயன்படுத்துவதால் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

எனவே தற்போது இருக்கும் நீர் ஆதாரத்தை கொண்டு பயிர்களுக்கு குறைந்த அளவில் தண்ணீர் பாசனம் செய்து அதிக விளைச்சல் பெறுவதற்கு நுண்ணீர் பாசன முறை மிகவும் ஏற்றதாகும். நுண்ணீர் பாசனம் மூலம் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை பாசன நீர் சேமிக்கப்படுகிறது. அவ்வாறு சேமிக்கப்பட்ட நீரை கொண்டு அதிகப்படியான நிலப்பரப்பில் பாசனம் செய்ய முடியும். மேலும் பயிர் வளர்ச்சிக்கேற்ப பயிருக்கு தேவையான உரங்களை, தேவையான இடத்தில், தேவையான அளவில் பாசன நீருடன் பகிர்ந்தளிக்கப்படுவதால் மண் வளம் மற்றும் நீர்வளம் பாதுகாக்கப்படுவதுடன், பயிர் விளைச்சல் 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கிறது.

மானியம்

இதனை கருத்தில் கொண்டு விவசாயிகளிடம் நுண்ணீர் பாசன முறைகளை ஊக்குவிக்கும் வகையில் பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் நுண்ணீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் அரசால் அளிக்கப்படுகிறது.

நடப்பு ஆண்டில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நுண்ணீர் பாசனம் அமைக்க 1,707 பொருள் இலக்கும், ரூ.12 கோடியே 40 லட்சம் நிதி இலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

நுண்ணீர் பாசனம் அமைக்க ஆர்வமுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு, ஆதார் அடையாள அட்டை, சிறு, குறு விவசாயிகள் சான்று மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 போன்றவற்றுடன் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி இந்த திட்டத்தில் பயன்பெறுங்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்