போலி ஆவணம் மூலம் ரூ.1 கோடி நிலம் மோசடி; தரகர் கைது
போலி ஆவணம் மூலம் பொன்னேரி அருகே ரூ.1 கோடி நிலத்தை மோசடி செய்து பறிக்க முயன்ற நிலத்தரகர் கைது செய்யப்பட்டார்.;
போலி ஆவணம் மூலம்...
சென்னை முகப்பேர் கிழக்கு 2-வது தெருவை சேர்ந்தவர் விஷ்ணுகுமார் (வயது 50). இவர் பொன்னேரி அடுத்த நல்லூர் கிராமத்தில் 66 சென்ட் நிலத்தை கடந்த 2003-ம் ஆண்டு பாக்கியம் என்பவரிடமிருந்து பெற்று செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து அனுபவத்தில் வைத்து வந்தார். அதைத்தொடர்ந்து மேற்படி நிலத்தை சுற்றிலும் வேலி அமைப்பு அதனுள் சிறிய வீட்டினை அமைத்து விஷ்ணுகுமார் விவசாயம் செய்து வந்தார்.
இந்த நிலையில், நிலத்தரகரான சென்னை கிழக்கு தாம்பரம் வேங்கைவாயல், சாமிநாதபுரம், பள்ளி தெருவை சேர்ந்த ஜாகீர் உசேன் (வயது 54) என்பவர் விஷ்ணுகுமாரின் இடத்தை போலி ஆவணம் மூலம் மிரட்டி அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விஷ்ணுகுமார் சோழவரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் எவ்வித வழக்கும் பதிவு செய்யாமல் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
கைது
இது தொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் அவர் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில், துணை போலீஸ் கமிஷனர் பெருமாள் அறிவுறுத்தலின்படி, உதவி போலீஸ் கமிஷனர் பொன்சங்கர் மேற்பார்வையில், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்த ஜாகீர் உசேனை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது.