போலீஸ்காரர்களிடம் ரூ.1½ கோடி மோசடி; ஆயுதப்படை போலீஸ்காரர் கைது

ஆவடியில் ஆயுதப்படை மற்றும் பட்டாலியன் போலீஸ்காரர்களிடம் ரூ.1½ கோடி மோசடி செய்த மற்றொரு போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-14 06:20 GMT

ஆயுதப்படை போலீஸ்காரர்

ஆவடியில் உள்ள சத்தியமூர்த்தி நகர் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் பூம்பாண்டி (வயது 31). இவர், ஆவடியில் உள்ள ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, சென்னை ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணிபுரியும் நண்பர் ரமேஷ் என்பவர் மூலம் ஆவடியில் உள்ள ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணிபுரியும் மதுரவாயல் ஏரிக்கரை, தனலட்சுமி நரைச்சேர்ந்த தர்மன் (31) என்பவர் அறிமுகம் ஆனார்.

அப்போது தர்மன், மலேசியாவில் உள்ள ஒரு எண்ணெய் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.15 ஆயிரம் லாபம் கிடைக்கும் என்றார். அதை நம்பிய பூம்பாண்டி, ரூ.5 லட்சத்தை செலுத்தினார். அதற்காக அவருக்கு ரூ.75 ஆயிரம் கிடைத்தது.

ரூ.1½ கோடி மோசடி

இதனால் அவருக்கு அந்நிறுவனத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டது. இதனால் பூம்பாண்டி தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமும், அதேபோல் தர்மனின் நண்பர்களான ஆவடி ஆயுதப்படை போலீஸ்காரர்கள் ஜானகிராமன் மற்றும் அரிகிருஷ்ணன் ஆகியோர் மூலம் மேலும் சில பட்டாலியன் மற்றும் ஆயுதப்படை போலீஸ்காரர்களிடம் இருந்தும் என மொத்தம் ரூ.1 கோடி 44 லட்சம் வரை முதலீடு செய்தனர்.

ஆனால் பணத்தை கட்டிய போலீஸ்காரர்கள் யாருக்கும் மாத தொகை வரவில்லை. தொடர்ந்து பணம் முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி தராமல் தர்மன் ஏமாற்றி வந்ததால் இதுகுறித்து ஆவடியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் பூம்பாண்டி புகார் கொடுத்தார்.

கைது

இதையடுத்து ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன் வழக்குப்பதிவு செய்து ஆவடி ஆயுதப்படை போலீஸ்காரர் தர்மனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

இதுவரை இவரால் பாதிக்கப்பட்ட 16 பேர் புகார் அளித்துள்ளனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் தர்மனுக்கு உடந்தையாக இருந்து தற்போது தலைமறைவாக உள்ள போலீஸ்காரர்கள் ரமேஷ், ஜானகிராமன் மற்றும் அரிகிருஷ்ணன் ஆகியோரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்