தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1¼ கோடி மோசடி

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1¼ கோடி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2022-11-10 15:49 GMT

செங்கம் அருகில் உள்ள பரமனந்தல், புதுப்பாளையம், குப்பநத்தம், புதுப்பட்டு, ஆண்டிபட்டி உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டவர்கள் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். புகார் மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

செங்கம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரூ.500, ரூ.450 என தீபாவளி சீட்டும், ரூ.1,000 நகை சீட்டும் செங்கம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 2 பேரிடம் கட்டி வந்தோம். தீபாவளிக்கு முன்பு சீட்டு பணம் பிரித்த நாங்கள் அவர்களிடம் சீட்டு பணத்தை கேட்ட போது அடுத்த மாதம் தருவதாக தெரிவித்தனர்.

தீபாவளி முடிந்து ஒரு மாதமாகியும் அவர்கள் தீபாவளி சீட்டுக்கு உரிய மளிகை பொருட்கள், நகைகள் மற்றும் பணத்தை கொடுக்காமல் மோசடி செய்து அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் மோசடி செய்த சீட்டு பணத்தின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 25 லட்சம் இருக்கும். எனவே தலைமறைவாகியுள்ள அவர்களை கண்டுபிடித்து, தீபாவளி சீட்டு பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்