ரவுடி சரமாரி வெட்டிக்கொலை

கும்பகோணம் அருகே ரவுடி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-06-29 20:49 GMT
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள சாலியமங்கலம் நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி(வயது 40). கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் கும்பகோணத்தை அடுத்த கொரநாட்டுக்கருப்பூர் வையாபுரி தெரு பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று காலை 7.30 மணியளவில் புண்ணியமூர்த்தி, அதே பகுதியில் உள்ள ஒரு கடைக்கு டீ குடிப்பதற்காக சென்றார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்தபடி 4 மர்ம நபர்கள் அங்கு வந்தனர்.

சரமாரி வெட்டிக்கொலை

அவர்கள் அனைவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் புண்ணியமூர்த்தியை தாங்கள் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த புண்ணியமூர்த்தி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இந்த சம்பவத்தை பார்த்து அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வலைவீச்சு

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா போலீசார் புண்ணிய மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இந்த கொலை சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து புண்ணியமூர்த்தியை கொலை செய்தவர்கள் யார்?, கொலைக்கான காரணம் என்ன? ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதுடன் தலைமறைவான கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

பல்வேறு வழக்குகள்

தற்போது கொலை செய்யப்பட்ட புண்ணியமூர்த்தி கடந்த 2020-ம் ஆண்டு கும்பகோணத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர் ஆவார்.அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்