ரவுடி வெட்டிக்கொலை

நெய்வேலியில் ரவடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-08-13 19:42 GMT

நெய்வேலி, 

ரவுடி மகன் கொலை

நெய்வேலி, 21-வது வட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் வீரமணி(வயது 43). இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். பிரபல ரவுடியான வீரமணி மீது நெய்வேலி டவுன்ஷிப், தெர்மல், கள்ளக்குறிச்சி ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை, வழிப்பறி, வெடிகுண்டு வீசுதல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வீரமணியின் மகன்களில் ஒருவரான சிவகுமாரை, 21-வது வட்டத்தை சேர்ந்த மகேஷ் குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கொலை செய்தனர்.

இதனால், அவர்களை பழிவாங்க வீரமணி திட்டம் தீட்டி வந்துள்ளார். இதில் கடந்த ஆண்டு மகேஷ் குமாரின் நண்பரான ஜெயக்குமார் வீட்டில் வீரமணி வெடிகுண்டு வீசினார்.

அரிவாளால் வெட்டினர்

இந்த வழக்கில் கைதான அவர், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் தண்டணை காலம் முடிந்து கடந்த ஜூன் மாதம் 13-ந்தேதி சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, வீரமணி நெய்வேலி 30-வது வட்டத்தில் உள்ள தனது தாய் கலியம்மாள் வீட்டில் தங்கினார். அப்போது இரவில் வீட்டு முன்பு கட்டிலில் படுத்து வீரமணி தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் வீரமணியை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.

போலீஸ் விசாரணை

வீரமணியின் அலறல் சத்தம் கேட்டு கலியம்மாள் ஓடிவந்து பார்த்த போது, அங்கு அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அப்போது உடலை பார்த்து அவர் கதறி அழுதார். இதுபற்றி தகவல் அறிந்த நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் தெர்மல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வீரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு

இது தொடர்பாக கலியம்மாள் போலீசில் அளித்த புகாரில், வீரமணியை அவரது எதிரிகளான மகேஷ் குமார், பார்த்திபன், பிரசாத் மற்றும் 3 பேர் சேர்ந்து வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பி சென்றதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெய்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்