ரவுடி துரை என்கவுண்ட்டர் சம்பவம்: இன்ஸ்டாகிராமில் கொலை மிரட்டல் வீடியோ வைரல்
ரவுடி துரை போலீசார் என்கவுண்ட்டாில் சுட்டுக்கொல்லப்பட்டார்.;
புதுக்கோட்டை,
திருச்சியை சேர்ந்தவர் பிரபல ரவுடி துரை என்கிற துரைசாமி. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே தைல மரக்காட்டு பகுதியில் ரவுடி துரை போலீசாரால் என்கவுண்ட்டாில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது குடும்பத்தினர், உறவினர்கள் இந்த என்கவுண்ட்டர் சம்பவத்தில் நீதிபதி விசாரணை தேவை என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ரவுடி துரையின் புகைப்படத்துடன் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவானது கொலை மிரட்டல் விடும் பாணியில் அமைந்திருக்கிறது. அந்த வீடியோ பதிவில், `திருச்சியில் சிந்தித்து பார்க்க முடியாத அளவிற்கு தலைகள் சிதறும்'... என குறிப்பிட்டு அதில் ரவுடி துரையின் புகைப்படம் மற்றும் இறுதி சடங்கின் போது அவரது உடல் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தையும் வைத்து, வலியில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், வலியில் நாங்கள் துடித்து கொண்டிருக்கிறோம்... எனும் பாடல் பின்னோட்டத்தில் ஒலிக்கிறது.
இந்த வீடியோவை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவிறக்கம் மற்றும் பகிர்வுகள் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.