கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெற்று நேப்பியர் பாலம்-கலங்கரை விளக்கம் இடையே 'ரோப்கார்' திட்டம் - பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தகவல்
கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெற்று நேப்பியர் பாலம்-கலங்கரை விளக்கம் இடையே ‘ரோப்கார்’ திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, சென்னை பல்கலைக்கழக ஆட்சிப்பேரவை உறுப்பினரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. இதற்கு 68-வது வார்டு உறுப்பினர் அமுதா மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதனால் அவர் போட்டியின்றி உரிய தேர்தல் விதிகளின்படி கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது 152-வது வார்டு உறுப்பினர் பாரதி, 'சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைக்கு கணக்கெடுக்கும் பணி தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படுவதாகவும், சம்பந்தப்பட்ட பகுதிகள் குறித்த முழுவிவரம் தெரிந்த வார்டு உறுப்பினர்களிடம் கலந்தாலோசிக்கப்படாமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும்' கேள்வி எழுப்பினார்.
அதற்கு, கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, 'தனியார் நிறுவனத்தின் மூலம் தற்போது கணக்கெடுக்கும் பணி மட்டுமே நடைபெறுகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏற்கனவே உள்ள புள்ளி விவரங்களின்படி 30 ஆயிரம் சாலையோர வியாபாரிகள் இருக்கின்றனர். கணக்கெடுக்கும் பணி முடிந்த பிறகு அதற்கான அறிவிப்பாணை வெளியிடப்படும். பின்னர், நகர் விற்பனைக்குழு அளிக்கும் சான்றிதழின் அடிப்படையில்தான் அடையாள அட்டை வழங்கப்படும்' என்றார்.
அதற்கு சில உறுப்பினர்கள் அந்த நகர் விற்பனைக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் யார்? யார்? என்று கேட்டனர். அதுகுறித்த விவரத்தை விரைவில் தெரிவிப்பதாக கமிஷனர் கூறினார்.
182-வது வார்டு உறுப்பினர் சதீஷ்குமார், 'மழைக்காலம் தொடங்கும் சூழ்நிலையில், மழைநீர் வடிகால் பகுதியை தூர்வாருவதற்கு ஜெட்ராடிங் மற்றும் ஷக்கர் எந்திரம் கொண்ட வாகனம் 5 மண்டலத்துக்கு ஒன்று என்ற வீதத்தில்தான் இருக்கிறது. இதை வைத்து எப்படி சமாளிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு மேயர் பிரியா, 'மாநகராட்சியில் அந்த வாகனத்தின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திடம் அதிக வண்டிகள் இருக்கின்றன. தேவை ஏற்பட்டால் அங்கிருந்து பெற்று சரிசெய்துவிடலாம்' என்றார்.
அதன்பின்னர், நேரமில்லா நேரத்தில், 138-வது வார்டு உறுப்பினர் கண்ணன், 'அம்மா உணவகத்தில் ஊழியர்கள் நேரத்துக்கு சரிவர வருவதில்லை என்றும், அங்கு உணவு வழங்குவதில் குளறுபடி, பதுக்கல் சம்பவங்கள் நடைபெறுகிறது' என்றும் பேசினார்.
அதற்கு கமிஷனர், 'டோக்கன் முறையை முறைப்படுத்தி அதன்படியே அம்மா உணவகத்தில் உணவுகள் வழங்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், ஊழியர்கள் தவறு செய்தால், அதனை உரிய ஆதாரங்களோடு தெரிவித்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.
104-வது வார்டு உறுப்பினர் செம்மொழி, 'மெரினா கடற்கரையையொட்டி, நேப்பியர் பாலம்-கலங்கரை விளக்கம் இடையே 'ரோப்கார்' திட்டத்தை கொண்டுவந்தால் நன்றாக இருக்கும். முதல்-அமைச்சரிடம் இதை கொண்டு சென்று இதில் சிறப்பு கவனம் செலுத்தலாம்' என்று ஆலோசனை கூறினார்.
அதற்கு மேயர் பிரியா, 'இது ஒரு நல்ல திட்டம். கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் (சி.ஆர்.இசட்.) ஒப்புதல் வாங்கிய பிறகு, மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.
கேள்வி மற்றும் நேரமில்லா நேரம் முடிந்ததும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பழுதடைந்த பொதுக்கழிப்பிட கட்டிடம், அங்கன்வாடி மைய கட்டிடம், வார்டு அலுவலக கட்டிடம், ஆரம்ப சுகாதாரநிலைய கட்டிடங்கள் இடிப்பதற்கான அனுமதி உள்பட 70 தீர்மானங்களை மேயர் பிரியா, உறுப்பினர்கள் ஒப்புதலோடு நிறைவேற்றினார்.